யாரை தான் நம்புவதோ? என்கிற பாடல் உலகம் முழுவதுமே எதிரொலிக்கிறது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், ஒரு கிராம் நகைக்காக கூட கொலைகளை சர்வ சாதாரணமாக செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க கிளம்புகிறார்கள்.
நம்பி வீட்டில் பணியமர்த்திய வேலையாள், தனிமையில் இருந்த முதலாளியம்மாவின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு, நகைகளுடன் தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெற்கு மும்பையில் நடந்த இந்த கொலை ப்ளஸ் திருட்டு சம்பவத்தின் அடிப்படையில், 19 வயது நபரை ரயிலில் சென்று கொண்டிருந்த போது மும்பை போலீசார் கைது செய்து நகைகளையும் மீட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட கன்ஹையா குமார் பண்டிட், மார்ச் 11ம் தேதி வழக்கம் போல், அந்த வீட்டிற்கு வேலைக்கு சென்றிருந்தார். அடுத்த நாளான மார்ச் 12ம் தேதி, அந்த வீட்டின் உரிமையாளர் ஜோதி ஷா (67) கொலையாகி கிடந்தார்.
நேபீன்சீ சாலையில் உள்ள தஹ்னி ஹைட்ஸ் பகுதியில் ஜோதி ஷா என்ற பெண், தனது வீட்டின் படுக்கையில் மயங்கிய நிலையில் காணப்பட்டார், அவரது கணவர், அதே பகுதியில் நகைக் கடை ஒன்றை நடத்தி வந்தார்.
தனது மனைவிக்கு செல்போனில் அழைத்த முகேஷ், மனைவி தனது அழைப்பை ஏற்காததால், சந்தேகமடைந்து, மனைவியைத் தேடி தனது வீட்டிற்கு வந்தார்.
மனைவி படுக்கையில் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அலறியடித்தப்படி மனைவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் ஜோதிஷா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
பீகாரின் தர்பங்காவைச் சேர்ந்த கன்ஹய்யா (19) எனும் வேலையாள், சம்பவம் நடந்தபோது தனது மனைவியுடன் வீட்டில் இருந்த ஒரே நபர் என்றும், மனைவியின் கொலைக்குப் பின்னார் அவர் காணாமல் போய் விட்டதாகவும், செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 3 லட்சம் மதிப்புள்ள 2 வைரம் மற்றும் தங்க வளையல்கள் திருடு போயிருப்பதாகவும் முகேஷ் போலீசாரிடம் விசாரணையின் போது தெரிவித்தார்.
போலீசாரின் விசாரணையின் போது, திருட்டின் போது ஜோதிஷா கண்ணையாவால் கழுத்தை நெரித்து கொலைச் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. கொலை குறித்த தகவல் அறிந்து மலபார் ஹில்ஸ் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது,
ஜோதிஷாவின் உடலில் கழுத்தை நெரித்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன என்றும், அவரது கணவர் அளித்த புகாரில்கொலைக்குப் பிறகு, வீட்டுப் பணியாளர் கண்ணையாவைக் காணவில்லை என்பதும் போலீசாரை கண்ணையா மீது சந்தேகப்பார்வை படும் படி செய்தது.
உடனடியாக கண்ணையாவை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் 15 புலனாய்வு குழுக்கள் பல்வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. அனைத்து முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் முழுவதுமாக ஸ்கேன் செய்யப்பட்டன.
மேலும் கண்ணையாவின் நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது, அவரது தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
அவர் ரயிலில் நகரத்தை விட்டு வெளியேற முயற்சிக்கும் வாய்ப்பிருப்பதை யோசித்து, கண்ணையாவின் வருகைக்காக ரயில்வே போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே லோக்மான்ய திலக் டெர்மினஸிலிருந்து பீகாருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்.
இருப்பினும், கொலை நடந்த அடுத்த சில மணிநேரங்களில் ரயிலில் வைத்தே கண்ணையாவைக் கைது செய்தனர். திருடப்பட்ட நகைகளையும் மும்பை போலீசார் மீட்டனர்.