தாய்-மகள் எடுத்த விபரீத முடிவு.. கணவன் இறந்த 3 மாதத்தில் சோகம்!!

183

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அடுத்த மூன்றே மாதத்தில் தாயும், மகளும் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் உறவினர்களையும், அந்த பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் வசித்து வந்தவர் குகநாதன். இவரது மனைவி கற்பகம் (42). இவர்களது மகள் சுபிக்ஷா (17). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த குகநாதன் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இந்நிலையில், வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வந்துள்ளார். அப்போது தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான குகநாதன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆனால், தொடர்ந்து இவரது மனைவி கற்பகத்தையும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொந்தரவு செய்ததால் சொந்த வீட்டில் இருந்து கோடியூர் பகுதியில் வாடகைக்கு சென்று மகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், தாய், மகள் இருவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், 12-ம் வகுப்பு முடித்துள்ள சுபிக்ஷா மற்றும் அவரது தாயார் கற்பகம் ஆகிய இருவரும் வெளி உலகம் தெரியாமல் வளர்ந்ததாக கூறப்படுகிறது.

அதனால் கடன் கேட்டு வந்த நபர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தாய் கற்பகம், மகள் ஆகிய இருவரும் குகநாதன் இறந்த துக்கத்திலும், கடன் பிரச்சினை காரணமாகவும் மன உளைச்சலில் இருந்த நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர் என்று போலீசார் தரப்பில் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.