இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏரியில் உள்ள நீரானது அடர் பிங்க் நிறமாக மாறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ளது லோனார் கிராடர் ஏரி. இந்த ஏரி சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
அதாவது, ப்ளீஸ்டோசீன் காலத்து ஏரி இதுவென கூறப்படுகிறது. ப்ளீஸ்டோசீன் என்பது குவாட்டர்னரி காலத்தின் முதல் சகாப்தம் அல்லது செனோசோயிக் சகாப்தத்தின் ஆறாவது சகாப்தமாகும். இந்த ஏரி சுமார் 113 ஹெக்டர் பரப்பளவு கொண்டது.
இத்தனை பழமையான இந்த ஏரியில் நீரின் நிறம் அடர் பிங்க் வண்ணத்தில் மாறியுள்ளது அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுதொடர்பாக அப்பகுதிவாசிகள் சிலர் ஏரியின் நிறம் மாறியுள்ள புகைப்படங்களை வனத்துறையினருக்கு பகிர்ந்துள்ளனர்.
இதேபோல், நேவி மும்பை தலாவே ஈர நிலப்பகுதிகளின் நிறமும் பிங்க் வண்ணத்தில் கடந்த மே 16 ஆம் திகதி மாறியிருந்தது.
இது தொடர்பாக, நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நீரின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். நீரின் நிறம் மாறியதற்கான உண்மையான காரணம் இன்னும் இரண்டு வாரங்களில் தெரியவரும் என்றார்.
இதுகுறித்து மற்ற அதிகாரிகள் கூறுகையில், இதேபோன்று இந்த ஏரியின் நிறம் மாறியுள்ளதாகக் கடந்த ஆண்டு இதே காலத்தில் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்து இருந்தனர்.
ஆனால், இந்த அளவிற்கு அப்போது நீரின் நிறம் அடர்த்தியாக மாறவில்லை. கோடைக் காலம் என்பதால் நீரின் அளவு ஏரியில் குறைந்துவிடும்.
அதனால், அதிக உப்புத்தன்மை காரணமாகவும், ஒருவித பாசி படர்வதாலும் இதுபோன்று நிறம் மாறியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
அதேபோல், தலாவே ஈர நிலப்பகுதிகளிலும் பாசிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் வளர்ந்ததால் ஏற்பட்ட வேதியியல் மாற்றத்தினாலே நீரின் நிறம் மாறியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.