மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமலாவில், பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து அதள பாதாளத்தில் உருண்டு விபத்திற்குள்ளானதில் 55 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமலாவில் பள்ளத்தாக்கு ஒன்றின் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி பள்ளத்தாக்கில் தலைக்குப்புற விழுந்தது. இதில் குறைந்தது 55 பேர் பலியானதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து கழிவுநீரால் மாசுபட்ட ஆற்றில் விழுந்துள்ளது. 70க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் இடிபாடுகளில் இருந்து 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது. அதன் பின்னர் சிகிச்சைப் பலனளிக்காமல் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்து எல் ப்ரோக்ரெசோவில் உள்ள சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து கவுதமாலா சிட்டிக்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தது. கவுதமாலா அதிபர் பெர்னார்டோ அரேவலோ இந்த துயரச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து, தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளார்.