திமுக கவுன்சிலரும், உறவினர்களும் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதால் பாதுகாப்பு கோரி காதலர்கள் திருமணமான நிலையில், சப்-கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைது, புகார் கூறியதால் பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியை சேர்ந்தவர்கள் சுமன் (21), ஸ்ரீலேகா(20). இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெற்றோர்களுக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், ஆனைமலை உப்பிலியர் சாலையில் வசிக்கும் ஸ்ரீலேகாவின் உறவினர்களான திமுக கவுன்சிலர் சாந்தி, அவரது கணவர் சதீஷ்குமார் ஆகியோர் தம்பதிக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
சுமன் தனது வீட்டிற்கு தண்ணீர் விநியோகத்தை துண்டித்தும் அவர்களை துன்புறுத்தி வந்துள்ளார். நேற்றும் கத்தியை காட்டி இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பாதுகாப்பற்ற நிலையில் வெளியில் செல்ல அச்சப்பட்டு இருந்துள்ளனர்.
இந்நிலையில் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், கொலை மிரட்டல் விடுக்கும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தம்பதிகள் தஞ்சமடைந்து மனு அளித்துள்ளனர்.