கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் கோலார் அருகே உள்ள முஸ்துரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் அர்பிதா கல்லூரி படிப்பை முடித்து வீட்டில் இருந்தபோது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதி இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த ரவி தனது மகளைக் கண்டித்து தனது உறவினர் மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
ஆனால் திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு சென்ற பிறகும் அந்த இளைஞனிடம் அர்பிதா பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் அர்பிதாவை அவரது தந்தை வீட்டிற்கு அழைத்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரவி கடந்த மே மாதம் அர்பிதாவை மறவேமன கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று கை,
கால்களை கட்டி வைக்கோல் இடையே எரித்து கொன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது மகள் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரிக்கும் போது நேற்று போலீஸ் நிலையத்திற்கு ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில் அர்பிதாவை தந்தை ரவி கொன்றதாக குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரவி மீது போலீசார் கவனம் திரும்ப, போலீசார் அவரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, தனது மகள் அர்பிதாவை கொலை செய்ததை ரவி ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்தனர். மகளைக் கொன்ற தந்தை 6 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.