திருமணமாகி ஒரு வருடமாக குழந்தை இல்லை.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

185

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன் (30). இவர் அம்பத்தூர் பகுதியில் ஆட்டோமொபைல் ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஷாலினி (25) என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக குழந்தை இல்லை என்பதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதில் நேற்றுமுன்தினம் மதியம் மாமனார், மாமியாருக்கும் ஷாலினிக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஷாலினி தனது தாய் தந்தைக்கு போன் செய்து குழந்தை இல்லாத காரணத்தால் மாமனார், மாமியார் மற்றும் கணவர் ஆகியோர் தன்னை துன்புறுத்துவதாக அழுதபடி கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஷாலினியின் வீட்டிற்கு போன் செய்து உங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முரளிதரன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சிடைந்த ஷாலினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

இதில் அதிகாலை 3 மணிக்கே ஷாலினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்த இவர்கள், ஏன் தங்களுக்கு 5 மணிக்கு தாமதமாக தகவல் தெரிவித்தனர் என ஷாலினி குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர்.


இதனையடுத்து செவ்வாய்பேட்டை போலீசார் விரைந்து வந்து ஷாலினியின் சடலத்தை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர்.

இந்நிலையில் முரளிதரன் குடும்பத்தினர் மாலை வரை மருத்துவமனைக்கு வந்து பார்க்கவில்லை. வரதட்சணையாக ரூ.12 லட்சம் ரொக்கம், நகைகள் மற்றும் அனைத்து சீர்வரிசைகளும் செய்து திருமணம் செய்து வைத்த நிலையில், குழந்தை இல்லை எனக்கூறி அவரை கொன்று விட்டதாகவும், அவரது சாவில் சந்தேகம் உள்ளதாகவும்,

இதில் முரளிதரன், அவரது தாய், தந்தை ஆகியோரை கைது செய்யும் வரை ஷாலினியின் உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மற்றும் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் ஆகியோர் ஷாலினியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருவள்ளூர் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.