கல்யாணமாகி இன்னும் முழுசா ஒரு வருஷம் கூட முடியலை. தனது கர்ப்பிணி மனைவிக்கு இளநீர் பறிப்பதற்காக தென்னை மரத்திலேறிய கணவர் தவறி மின் கம்பத்தின் மீது விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த தெற்கு திட்டைகிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். சென்னை வண்டலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக தங்கியிருந்து வேலைப் பார்த்து வந்தார்.
இவரது மனைவி நீதிகா. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், தற்போது நீதிகா 3 மாத கர்ப்பிணியாக சேத்தியாத்தோப்பு அருகே ஓடாக்கநல்லூரில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில் தனது கர்ப்பிணி மனைவி நீதிகாவைப் பார்ப்பதற்காக ஆனந்தராஜ் விடுமுறையில் தனது மாமியாா் வீட்டுக்கு சென்றிருந்தார்.
பின்னர் தனது மனைவிக்காக இளநீா் பறிக்க அவர்களின் வீட்டின் பின்புறத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறிய ஆனந்தராஜ், மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் எதிர்பாராதவிதமாக மரத்தின் அருகே சென்றுக் கொண்டிருந்த மின்ஒயரில் சிக்கினார்.
இதில் மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு ஆனந்தராஜைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்தராஜ் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது கர்ப்பிணி மனைவிக்கு இளநீர் பறிக்க ஆசையாசையாக சென்ற இளைஞர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.