மேற்படிப்பு படிக்க விரும்பிய நிலையில், திடீரென திருமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த புதுப்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள சந்துரு கொண்டா மண்டலத்தில் உள்ள மங்கையபஞ்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனு. இவரது மனைவி பத்மா. விவசாயக் கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு தேவகி(23) என்ற மகள் இருந்தார். இவருக்கும், கடந்த மாதம் 28-ம் தேதி துப்பண்டா கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், திருமணம் முடிந்த பதினாறாவது நாளில் திருவிழாவுக்காக மங்கையபஞ்சார் கிராமத்திற்கு தேவகி வந்திருந்தார். கடந்த 14-ம் தேதி இரவு அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, தேவகி பூச்சிமருந்தைக் குடித்தார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு விழித்த அவரது பெற்றோர், உடனடியாக தேவகியை கொத்தகூடம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதன்பின் கம்மம் மருத்துவமனைக்கு தேவகி கொண்டு செல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த தேவகி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தேவகி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், ” தேவகி சமீபத்தில் தான் பிஎஸ்சி படித்து முடித்துள்ளார். இதன்பிறகு மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று தனது தாயிடம் தேவகி கூறியுள்ளார்.
ஆனால், உடல்நிலை சரியில்லை என்று கூறி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி சம்மதிக்க வைத்தனர். இதையடுத்து கடந்த மாதம் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற தனது ஆசை நிராசையானதால் தேவகி மனமுடைந்து இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்” என்றனர்.
திருமணமான ஒரு மாதமேயான நிலையில் புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.