கோவை அருகே புதுமணப்பெண் காணாமல் போன நிலையில் அதே நாளில் பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமான இளைஞரும் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள பஞ்சாலை ஒன்றில் பணியாற்றி வருபவர் சிவக்குமார் (வயது 26). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் இயங்கி வரும் கேட்டரிங் சர்வீஸ் ஒன்றில் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது இவருடன் பணியாற்றிய கண்மணி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட அது காதலாக மாறியுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
அப்போது கண்மணி, தனக்கு உறவினர் என்று மேட்டுப்பாளையத்தில் அக்கா ஒருவர் மட்டும் இருப்பதாகவும், அவரும் காதல் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டார் எனவும் சிவக்குமாரிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கண்மணியை தனது சொந்த ஊரான மதுரை வாடிப்பட்டிக்கு அழைத்துச் சென்ற சிவகுமார் உறவினர்களின் சம்மதத்துடன் அங்குள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் இருவரும் கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள பஞ்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.
இருவரும் பஞ்சாலை குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை கண்மணி, நகைகள் சிலவற்றை மேட்டுப்பாளையத்தில் உள்ள அடகு கடை ஒன்றில் அடமானம் வைத்திருப்பதாகவும்,
அதை மீட்டு வருவதற்காக 12 ஆயிரம் ரூபாய் வேண்டுமெனவும் சிவகுமாரிடம் கேட்டுள்ளார். மறுநாள் 12 ஆயிரம் ரூபாயை கண்மணியிடம் கொடுத்த சிவக்குமார், நகைகளை மீட்டு வர அதிகாலை 5 மணிக்கு பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
மனைவி கண்மணி மாலை வரை திரும்பி வராத நிலையில், அவரது செல்போன் எண்ணும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து தன் அக்கா வசிப்பதாக கண்மணி ஏற்கனவே சொல்லியிருந்த மேட்டுப்பாளையம் முகவரிக்கு சிவக்குமார் சென்று பார்த்துள்ளார்.
அப்போது அங்கு கண்மணியின் உறவினர் என யாரும் இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து சூலூர் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என சிவகுமார் புகார் அளித்தார்.
இந்த நிலையில் அதே பஞ்சாலை குடியிருப்பில் வசிக்கும் தினேஷ் (வயது 28) என்ற இளைஞர் அதே நாளில் மாயமானதாக அவரது மனைவி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தினேஷ்க்கு கைக்குழந்தை உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனது நண்பர் ஒருவரிடம் அவசர தேவையாக 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாக கூறி கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
காணாமல் போன இருவர் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தினேஷ் மற்றும் கண்மணியின் செல்போன் சிக்னல்கள் ஒரே இடத்தில் காட்டுவதாக தெரிகிறது. திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் மற்றும் பக்கத்து வீட்டு இளைஞர் ஒரே நாளில் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.