திருமணம் செய்து கொண்ட தன்பால் ஈர்ப்பாளர் இந்திய தம்பதி : முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக மகிழ்ச்சி!!

31840

அமெரிக்காவில்..

இந்திய – அமெரிக்கர்களான தன்பால் ஈர்ப்பாளர் தம்பதிக்கு கடந்த 2019ல் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் அமித்ஷா மற்றும் ஆதித்யா மடிராஜு என்ற 2 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அமித்ஷா “ஸ்ப்ரிட்” என்ற நடனக்குழுவின் பொறுப்பாளர் ஆவார்.

ஆதித்யா பேரிடர் மேலாண்மை குழுவில் பணியாற்றி வருகிறார். 2016-ஆம் ஆண்டு முதல் இருவரும் ஒன்றாக பழகி வருகின்றனர். இதனிடையே இருவரது நட்பும் காதலாக மாறுவதை இருவரும் உணர்ந்தனர்.


ஓரினச்சேர்க்கையாளர்களான இருவரும் குடும்பத்தாரின் சம்மதம் பெற்று கடந்த 2019ல் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் அமித்ஷா – ஆதித்யா தம்பதி வரும் மே மாதத்தில் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

கருமுட்டை தானம் செய்பவர்கள், வாடகை தாய், ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து பிரசவிக்கும் பெண் (குழந்தைக்கும் அவருக்கும் எந்த உயிரியல் தொடர்பும் இல்லை) போன்றவைகள் குறித்து முழுவதுமாக தம்பதி அறிந்து கொண்டனர்.

இதையடுத்து கருமுட்டையுடன், விந்தை இணைத்து, செயற்கையாக உருவாக்கப்படும் கருக்களை ஒரு பெண்ணின் கருப்பையில் தக்கமுறையில் வைப்பதன் மூலம் குழந்தை பெறும் வாய்ப்பை ஆதித்யா – அமித்ஷா பெற்றுள்ளனர்.

ஆதித்யா கூறுகையில், ஒரே பாலின ஜோடியாக இருந்தாலும் பரவாயில்லை, நாம் விரும்பும் வாழ்க்கையை நடத்த முடியும். எங்களுக்குப் பிறகு பல தன்பால் ஈர்ப்பாளர் தம்பதி திருமணம் செய்து கொண்ட நிலையில்,

இது அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று நான் விரும்புகிறேன்,. நாங்கள் ஓரின சேர்க்கை பெற்றோராக இருக்க மாட்டோம், எல்லாரையும் போல நாங்கள் பெற்றோராக இருப்போம் என கூறியுள்ளார்.