திருமண நாளில் சோகம்.. பெண் பரிதாப பலி.. தவிக்கும் 3 குழந்தைகள்!!

142

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே ஊரணிபுரம் பட்டுவீதி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி (43). திருமண நாளான நேற்று (நவ.9) கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை முதல் சுமார் 3 மணி நேரம் திருவோணம் பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது வெயில் அடித்ததும் துணிகளை துவைத்து வெயிலில் காயவைக்க மற்றொரு சிறிய கம்பியை வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் கட்டியுள்ளார்.

அதில் துணிகளை காயவைத்த தங்கமணி, காய்ந்த துணிகளை எடுக்க சென்றார். அப்போது வீட்டில் இருந்த இரும்பு கம்பி வழியாக கொடி கம்பியில் மின்சாரம் பாய்ந்து தங்கமணி மீது மின்சாரம் பாய்ந்தது.

மூக்கில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தங்கமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தங்கமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவோணம் போலீஸார், தங்கமணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இது தொடர்பாக திருவோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரசாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தங்கமணிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், திருமண நாளில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.