திருவண்ணாமலை மாவட்டத்தில் காதல் திருமணம் செய்துக் கொண்ட ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு திடீரென காவல் நிலையத்திற்குள் தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் கடந்த 24 வருடங்களாக அந்த பகுதியில் சமூக சேவை செய்து வருகிறார். இந்நிலையில் மணிமாறன்.
திருப்பத்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் கடந்த 1½ வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அதன் பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் மூலம் மிரட்டல் வருவதாக கூறி மணிமாறன் நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திடீரென தனது காதல் மனைவியுடன் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.
இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில், “நான் கடந்த 24 வருடங்களாக சமூக சேவை செய்து வருகிறேன். தேசிய விருதுகள், மாவட்ட விருதுகள் போன்றவை சமூக சேவைக்காக நான் பெற்றுள்ளேன். திருப்பத்தூரை சேர்ந்த பூர்ணிமாவும், நானும் கடந்த 1½ வருடங்களாக காதலித்து வந்தோம்.
பூர்ணிமாவின் முழு சம்மதத்துடன் கடலூரில் உள்ள கோவில் ஒன்றில் காதல் திருமணம் செய்து கடலூரில் உள்ள பதிவுத்துறையில் பதிவுத் திருமணம் முறைப்படி செய்து கொண்டோம்.
இந்நிலையில் எனது மனைவியின் குடும்பத்தாரிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள் மற்றும் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் வருகிறது. எனவே எங்கள் இருவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.