தமிழகத்தில் உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகள் பெரும்பாலான இடங்களில் தரமில்லாததாகவும், சுகாதார குறைவாகவும் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக அசைவ வகையான உணவுகளில் கலப்படம், கெட்டுப் போன இறைச்சி பயன்படுத்துதல் போன்றவை அடிக்கடி அரங்கேறுகின்றன.
பிரியாணியில் கரப்பான்பூச்சி, சிக்கன் க்ரேவியில் எலி தலை போன்றவை இருந்த சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஆயிரக்கணக்கில் கெட்டுப் போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் பரோட்டா சாப்பிட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ஏழுமலை, சங்கீதா. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில், இவர்கலின் மகன் சுதர்சனன் தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வீட்டின் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் சுதர்சனன் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார்.
இதில் வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சுதர்சனன் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை சரியாகாததால் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று காலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும். அதே நேரத்தில் பரோட்டா சாப்பிட்டதால் தான் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.