நடுக்கடலில் மூழ்கி விபத்தில் சிக்கிய அகதிகள் கப்பல்! ஐரோப்பா செல்ல முயன்ற 45 பேர் பரிதாப பலி!!

343

லிபியா கடல் எல்லையில் கப்பல் ஒன்று திடீரென்று மூழ்கியதால், அதில் இருந்த ஐந்து குழந்தைகள் உட்பட குடியேறுகள் மற்றும் அகதிகள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா அகதிகளின் ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போது இருக்கும் கொரோனா சூழ்நிலையை பயன்படுத்தி, அகதிகள் மற்றும் குடியேறிகள் சட்டவிரோதமாக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குள் நுழைவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், லிபிய கடல் எல்லையில் கப்பல் ஒன்று மூழ்கியதில் அதில் இருந்த ஐந்து குழந்தைகள் உள்பட 45 குடியேறிகள் மற்றும் அகதிகள் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு நடந்த மிகவும் மோசமான கப்பல் விபத்து இது என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்வாரா நகரின் கடற்கரையோரம் எஞ்சின் வெடித்ததன் காரணமாக குறித்த இந்த கப்பல் விபத்திற்குள்ளானது. அதில் இருந்த 80-க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாக ஐ.நா அகதிகளுக்கான ஆணையம் குறிப்பிட்டுள்ளது.


விபத்திலிருந்து உயிர் தப்பிய 37 பேர் உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டனர்.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று ஐநா அகதிகள் உயர் ஆணையம் மற்றும் ஐநாவின் சர்வதேச குடிப்பெயர்வு அமைப்பு ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

இதற்காக தனியான தேடுதல் மற்றும் மீட்பு பொறிமுறை இல்லாவிட்டால் மத்தியத் தரைக்கடல் பகுதியில் மேலும் பல உயிரிழப்புகள் நிகழும் என்றும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

லிபியாவில் இருந்து கடல் கடந்து ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 300-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

லிபியாவில் ஆட்சியிலிருந்த மும்மார் கடாபி கடந்த 2011-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த நீக்கப்பட்டு கொல்லப்பட்ட பின்னர், குடியேறிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் முக்கிய நாடாக லிபியா உள்ளது குறிப்பிடத்தக்கது.