தமிழகத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியின் கழுத்தில், வலுக்கட்டாயமாக தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி, கர்ணாம்பட்டுப் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவைச் சேர்ந்த 17 வயது மாணவி, சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி ஆகிய 4 சிறுமிகளுக்கும் நேற்று திருமணம் நடைபெறவிருந்தது.
இது குறித்து ரகசிய தகவல் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்ததால், வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் திருமணங்களை தடுத்து நிறுத்தினர்.
மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் அரசு காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. சிறுமிகளுக்கு குழந்தை திருமணத்தை நடத்த முயன்ற பெற்றோரிடம் சமூக நலத்துறை மற்றும் பொலிசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இதில் காட்பாடி கழிஞ்சூரைச் சேர்ந்த 15-வயது சிறுமிக்கு வலுக்கட்டாயமாக இரவில் திருமணம் நடத்தியதாக, விடிந்தவுடன் நேரடியாக விருதம்பட்டு காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இது குறித்து சிறுமி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், எனக்கு குழந்தை திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.
அதை நான் மறுத்தபோதும் கூட, நேற்று இரவு என் பாட்டி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது என்னுடைய கைகளை கட்டி விட்டு வலுக்கட்டாயமாக இரவு சுமார் 11.30 மணியளவில் கழுத்தில் தாலி கட்டி விட்டனர்.
நான் விடிந்த பிறகு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வந்துவிட்டேன். எங்கு புகார் அளிப்பது என்று தெரியாத நிலையில், பள்ளியில் இருந்து ஒருமுறை விருத்தம்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததாகவும் அதனால் அங்கு புகார் அளிக்கலாம் என்று வந்ததாகவும் கூறினார்.
அதன் பிறகு சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் சிறுமியை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.