நவராத்திரி கொண்டாட முடியல.. மாதவிலக்கு காரணமாக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

95

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் வசித்து வருபவர் 36 வயது பிரியான்ஷா சோனி. இவர், அம்மாநிலத்தில் சைத்ர நவராத்திரியைக் கொண்டாடவும், துர்கா தேவியை வழிபடவும் தயாராகிக் கொண்டிருந்தார்.

இதற்காக, தனது கணவர் முகேஷ் சோனியிடம் பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரும்படி ஆர்வமாக லிஸ்ட் தயாரித்து கொடுத்துள்ளார்.

9 நாள் கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, அதாவது சைத்ர நவராத்திரியின் முதல் நாளான மார்ச் 30 அன்று, சோனிக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டது.

இதன் காரணமாக, சோனியால் அந்த நவராத்திரி பிரார்த்தனையில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இதனால் சோனி மனமுடைந்துள்ளார். என்றாலும், அவரது கணவர் ஆறுதல்படுத்திவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார்.

தொடர்ந்து இதே அழுத்தத்தில் இருந்த அவர், விஷம் குடித்தார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பிறகு உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

எனினும் அடுத்து வந்த நாட்களில் அவரது உடல் நலம் குன்றத் தொடங்கியதை அடுத்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இது குறித்து ப்ரியான்ஷா கணவர் முகேஷ், “இந்த நவராத்திரிக்காக அவர் ஒருவருடம் காத்திருந்தார். ஆனால் அது வந்த போது, ​​மாதவிலக்கு காரணமாக அவரால் விரதம் இருக்கவோ அல்லது தெய்வத்தை வணங்கவோ முடியவில்லை.

இதையடுத்து அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். ‘இது எல்லாம் எப்படி நடக்கும்? இப்படி இருந்தால் யார் பிரார்த்தனை செய்வார்கள்’ என என்னிடம் புலம்பினார்.

’மாதவிலக்கு என்பது ஒரு இயற்கையான செயல்முறை. தவிர, மாதாந்திர நிகழ்வு என விளக்கினேன். தொடர்ந்து, அவளுக்கு நான் ஆறுதல் கூறினேன். ஆனால் அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவள் சார்பாக அனைத்துச் சடங்குகளையும் செய்ய நான் முன்வந்தேன், ஆனால் அவள் கடைசிவரை சோகமாகவே இருந்தாள்” எனத் தெரிவித்துள்ளார்.