நானில்லாம அவங்க ரெண்டு பேரும் கஷ்டப்பட வேண்டாம் என்று மனைவியையும், மகளையும் கொன்று விட்டு கணவனும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே அரண்மனைபுதூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (37).
இவர் தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அசிதா என்ற மனைவியும், பிரித்திகா என்ற 5 வயது மகளும் இருந்தனர். இந்நிலையில், நிதி நிறுவனத்தில் கடன் பிரச்னையால் சதீஷ்குமார் 4 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை.
வீட்டில் ஏற்பட்ட பிரச்னையால் மனமுடைந்த சதீஷ்குமார் மனைவி, குழந்தையை கொன்றுவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீஸார் சடலங்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், சதீஸ்குமார் வீட்டில் ஆய்வு செய்தபோது, சதீஸ்குமார் சாவுக்கான காரணத்துடன் எழுதிய கடிதம் மற்றும் டைரியை கண்டுபிடித்தார்.
அதில், “என்னால் வாழ முடியாது. நான் இறந்தால் என் மனைவி மற்றும் குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுவார்கள், அதனால் அவர்களையும் என்னுடன் அழைத்துச் செல்வேன். என் விதி முடிந்து விட்டது.
தயவுசெய்து அனைவரும் என்னை மன்னியுங்கள். ஐ லவ் யூ ஆஷிதா, பிரித்திகா”. மேலும் முதுகலை பட்டதாரியான அவரது காதல் மனைவி, சதீஸ்குமாருக்கு அறிவுரை கூறி டைரியில் பல குறிப்புகளை எழுதியுள்ளார். அதற்கு சதீஷ்குமாரும் பதில் எழுதினார்.
இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது, `இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குடும்பங்களுக்கு இடையே பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. சதீஷ்குமாருக்கும் கடன் பிரச்னை உள்ளது. இதனால் வீட்டில் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் கூட, அசிதாவின் பெற்றோர் அவரது வீட்டிற்கு வந்து அறிவுரை வழங்கியுள்ளனர். அசிதாவின் தந்தை நாகராஜ் அளித்த புகாரில், மருமகனின் தேவையற்ற செயலால் ஒரு குடும்பமே சீரழிந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.