வடக்கு ஆஸ்திரேலியாவில்..
வடக்கு ஆஸ்திரேலிய நகரான கெய்ர்ன்ஸ் பகுதியில் உள்ள குயின்ஸ்லேண்ட் கடற்கரையில், கடந்த 2018ம் ஆண்டு 24 வயதான பெண் சடலம் ஒன்று கிடைந்துள்ளது. விசாரணையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டோயா கோர்டிங்லே என்பவர் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆஸ்திரேலிய போலீசார் விசாராணை மேற்கொண்ட போது, மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. அதனால் கொலை வழக்கு கடந்த 4 வருடங்களாக விசாரணையில் நீடித்தது.
குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து கொலையாளியை கண்டுபிடித்து தருவோருக்கு 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வெகுமதி வழங்கப்படும் என கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
அதேபோல் இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசார் சார்பில் ரெட் கார்னர் நோட்டிஸ் அனுப்பப்பட்டது. இந்தநிலையில் டெல்லி போலீஸார் 38 வயதான ரஜ்விந்தர் சிங் என்பவரை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘‘ஆஸ்திரேலியாவில் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார் ரஜ்விந்தர் சிங்.
சம்பவத்தன்று மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு கையில் பழங்கள் மற்றும் காய்கறி வெட்டப் பயன்படுத்தும் கத்தியுடன் குயின்ஸ்லேண்ட் கடற்கரைக்கு வந்துள்ளார்.
அப்போது டோயா கோர்டிங்லே என்ற இளம்பெண் தனது நாயுடன் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது கோர்டிங்லே நாய் இவரைப் பார்த்து விடாமல் குரைத்துள்ளது.
இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மருத்துவ பணியாளாரான ரஜ்விந்தர் சிங், காய்கறி வெட்டப் பயன்படுத்தும் கத்தியால் ஆஸ்திரேலிய பெண்ணை சரமாரி குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர் நாயை ஒரு மரத்தி கட்டி போட்டு விட்டு, சடலத்தை கடற்கரை மணலில் புதைத்துள்ளார். கொலை நடந்த இரண்டாவது நாளில், தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு ரஜ்விந்தர் சிங்,
ஆஸ்திரேலியாவை விட்டு புறப்பட்டு இந்தியாவிற்கு வந்து பஞ்சாப்பில் தலைமறைவாகியுள்ளார்’’ என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரை கைது செய்த டெல்லி போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ரஜ்விந்தர் சிங்குக்கு 5 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீஸ், குயின்ஸ்லேண்ட் போலீஸ், சர்வதேச போலீஸ் மற்றும் இந்திய போலீஸ் ஆகியோர் கூட்டு முயற்சியாள் ரஜ்விந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.