கனடாவில் 26 ஆண்டுகளாக நீளும் தமது சகோதரியின் கொலை வழக்கு விசாரணையில் உதவ தயார் என பெண் ஒருவர் பிராந்திய பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
கனடாவில் எல்கின் கவுண்டியில் உள்ள சவுத்வோல்ட் எர்த்வொர்க்ஸ் பகுதியில் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30 ஆம் திகதி சோனியா சிவிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் நீண்ட 26 ஆண்டுகள் கடந்தும் பிராந்திய பொலிசாரால் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
சோனியா சிவிங்கின் கொலை வழக்கு தொடர்பில் சிலருக்கு உண்மை தெரியும் எனவும், ஆனால் அவர்கள் அதை பொலிசாரிடம் தெரிவிக்க பயப்படுவதாகவும் சோனியா சிவிங்கின் மூத்த சகோதரி மெகி சிவிங்க் தெரிவித்துள்ளார்.
அதனாலையே, தாம் இந்த விவகாரத்தில் பொலிசாருக்கு உதவ முன்வந்துள்ளதாக மெகி குறிப்பிட்டுள்ளார். பொலிசாரிடம் கூற பயப்படும் தகவல்களை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறும் மெகி,
அதன்மூலம் உண்மையான குற்றவாளியை நெருங்க முடியும் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார். சிவிங்க் குடும்பத்தினர் கடந்த ஆண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றையும் இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுத்தனர்.
மட்டுமின்றி, இந்த வழக்கில் கைது மற்றும் தண்டனைக்கு வழிவகுக்கும் தகவல்களுக்காக ஒன்ராறியோ மாகாண காவல்துறை வழங்கிய 50,000 கனேடிய டொலர் வெகுமதிக்கு சிவிங்க் குடும்பம் மேலும் 10,000 கனேடிய டொலர் சேர்த்தது.
இருப்பினும் தற்போது இந்த வழக்கு தொடர்பில் விசாரணைக்கு தம்மை உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்ராறியோ மாகாண காவல்துறை ஏற்குமா என்பது சந்தேகமே என்கிறார் மெகி சிவிங்க்.
தமது சகோதரி சோனியா கொல்லப்படும்போது அவர் 24 வார கர்ப்பிணி எனவும், இந்த விவகாரத்தின் உண்மை நிலை குறைந்தபட்சம் மூவருக்கு மட்டுமே தெரியும் எனவும், அவர்களில் ஒருவர் கொலைகாரன் எனவும் எஞ்சிய இருவர் சோனியாவும் பிறக்காமல் போன குழந்தையுமே என்கிறார் மெகி.