பகீர் சிசிடிவி காட்சிகள் பள்ளிமாணவியை காரில் கடத்திய முறைப்பையன்!!

263

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள சின்ன மாரியம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் முனியப்பன். இவரது மனைவி பூங்கொடி (54). மகன் சுப்பிரமணி (29). பூங்கொடியின் சகோதரர் சிவகுமார், அரசிராமணியை அடுத்த ஆத்துக்காடு பகுதியில் வசித்து வருகிறார்.

உடன் பிறந்த அண்ணன் தங்கையான இருவருக்கும் இடையே, கடந்த சில ஆண்டுகளாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தினரும் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர்.

சிவகுமாரின் 17 வயது மகள், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். தற்போது தேர்வு முடிந்துள்ளதால், விடுமுறையில் மாணவி வீட்டில் இருந்து வந்துள்ளார். சிவகுமாருக்கு உதவியாக,

வீட்டில் உள்ள கறவை மாடுகளில் இருந்து பெறப்படும் பாலை எடுத்து அருகில் உள்ள பால் மையத்தில் கொடுக்கும் வேலைகளில் மாணவி ஈடுபட்டு வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக கடந்த 1-ம் தேதி பால் மையத்திற்கு சென்று விட்டு தனது சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த சுப்பிரமணி மற்றும் பூங்கொடி ஆகியோர் சுப்பிரமணியை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளனர். ஆனால் இது தொடர்பாக தனது தந்தையிடம் பேசிக் கொள்ளுமாறு கூறிவிட்டு சிறுமி அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். அப்போது வலுக்கட்டாயமாக சிறுமியை கடத்திச் செல்லும் நோக்கத்தோடு சுப்பிரமணி, மாணவியை பிடித்து இழுத்துச் சென்றுள்ளார்.

இதற்கு உடந்தையாக இருந்த பூங்கொடி, சிறுமியின் சைக்கிளை அருகில் உள்ள புதரில் தூக்கிப் போட்டுவிட்டு காரில் சிறுமியை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து செல்ல முயற்சி செய்துள்ளார். அவர்களிடம் இருந்து போராடி தப்பித்த சிறுமி, உடனடியாக இது தொடர்பாக வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தேவூர் போலீசார் தலைமறைவாக இருந்த தாய் மற்றும் மகனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று சிறுமியின் அத்தை பூங்கொடி மற்றும் அவரது மகன் சுப்பிரமணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.