பட்டம் விடும் திருவிழா……
தைவானில் பட்டம் விடும் திருவிழாவின்போது பட்டத்தின் வாலில் சிக்கிய சிறுமி ஒருத்தி வானில் சுழற்றியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று காண்போரை பதற அடித்தது. தைவானின் Nanliao கடற்கரையில், புகழ்பெற்ற பட்டம் விடும் திருவிழா நடந்துகொண்டிருந்தது.
அப்போது எப்படியோ ஒரு மூன்று வயது சிறுமி பட்டம் ஒன்றின் வாலில் சிக்கியுள்ளாள்.
பட்டம் பறக்க, பட்டத்தின் வால் மேலெழும்ப, சுமார் 100 அடி உயரத்திற்கு வீசியெறியப்பட்டாள் அந்த சிறுமி.
பயந்து அலறினாலும், அவள் அந்த பட்டத்தை விடவில்லை. சிறுமியை ஒரு சுழற்று சுழற்றி வீசியபின் பட்டத்தின் வால் தரையை நோக்கி வர, காத்திருந்த மக்கள் அவளைப் பிடித்துக்கொண்டனர்.
என்றாலும், அவளுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாள்.
இந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து பட்டம் விடும் திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டது.
வெளியாகியுள்ள வீடியோவில், அந்த சிறுமி வானில் வீசியடிக்கப்படும் திகிலடையச் செய்யும் காட்சியையும், கீழே வேகமாக இறங்கும் அவளை மக்கள் ஓடிச்சென்று காப்பாற்ற முயலும் காட்சியையும் காணலாம்.