தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா மாகாணத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அஷ்ரப் காதர் மற்றும் அவரது மனைவி பாத்திமா இஸ்மாயில் ஆகியோரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,
அடுத்த 24 மணி நேரத்தில் கடத்தல் கும்பலிடம் இருந்து அஷ்ரப் காதரை போலீசார் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கடத்தல்காரர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, கடத்தல்காரர்கள் மம்லோடி என்ற பகுதியில் பதுங்கி இருப்பதும், அஷ்ரப் காதரின் மனைவி பாத்திமா இஸ்மாயில் அந்த பகுதியில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தொழிலதிபர் அஷ்ரப் காதரின் மனைவியே பணம் பறிப்பதற்காக இந்த கடத்தல் நாடகத்தை நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தல்காரர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பாத்திமா இஸ்மாயிலையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.