இத்தாலி………
இத்தாலியில் கொரோனா பாதிப்புக்கு இலக்கான புலம்பெயர்ந்த கர்ப்பிணி ஒருவர் ஹெலிகொப்டரில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பிள்ளை பெற்றெடுத்துள்ளார்.
அகதிகளை கூட்டமாக தங்க வைக்கப்பட்டுள்ள இத்தாலியின் லம்பேடுசா தீவில் இருந்தே குறித்த பெண்மணி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்த ஆண்டு புகலிடக்கோரிக்கையாளர்களின் வருகை அதிகரித்தே காணப்படுவதாக இத்தாலி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் லம்பேடுசா தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள குறித்த கர்ப்பிணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து சிசிலிய தலைநகர் பலேர்மோவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அவரை மாற்ற முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், பறக்கும் ஹெலிகொப்டரிலேயே அவர் பிள்ளை பெற்றெடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாயும் சேயும் தற்போது பலேர்மோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
சிசிலி தீவுக்கும் தேசிய அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்களுக்கு மத்தியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆப்பிரிக்காவிலிருந்து குடியேறியவர்களைக் கையாள்வதில் ரோம் தனக்கு போதுமான உதவி வழங்கவில்லை என்று சிசிலியின் ஆளுநர் நெல்லோ முசுமெசி குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.