பலரிடம் திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த இளம்பெண்!!

153

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளைஞர்களை ஏமாற்றி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில் இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது திருமணத்துக்காக பெண் தேடி வந்த நிலையில் மேட்ரிமேனி நிறுவனம் ஒன்றில் தனது விவரங்களைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் அதே மேட்ரிமோனியல் நிறுவனத்தில் வரன் தேடி பதிவு செய்திருந்த இளம்பெண் ஒருவர் அறிமுகமாகி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனக்கு மாப்பிள்ளைப் பார்த்து வருவதாக கூறியுள்ளார்.

உங்களது விவரங்கள் பார்த்தேன். எனக்கு பிடித்துள்ளது எனக்கூறி பழக தொடங்கிய அவர், அதன் பின்னர் வாட்ஸ் அப் மூலமாகவும், வீடியோ கால் மூலமாகவும் தொடர்ந்து பேசி பழகி வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தனது அக்காவுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுவதாகவும் கூறி இளைஞரிடம் பல்வேறு தவணைகளில் ரூ.7 லட்சத்து 12 ஆயிரம் வரை வங்கி பெற்றுள்ளார்.

அதன் பின்னர் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.


நாமக்கல் மாவட்டத்திற்கு சென்று இளம்பெண் கூறிய விலாசத்தில் விசாரித்த போது அது போலியான முகவரி என்று இளைஞருக்கு தெரிய வந்த நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, இது தொடர்பாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரளித்தார்.

போலீசார் அந்த பெண்ணின் செல்போன் எண், வங்கி கணக்கு எண் விவரங்களை வைத்து விசாரித்த போது மோசடியில் ஈடுபட்டவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த பிரியா(32) என்பது தெரிய வந்த நிலையில், தலைமறைவாக இருந்த பிரியாவைப் போலீசார் இன்று கைது செய்தனர்.

இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘‘பிரியாவுக்கு முதல் திருமணமாகி கணவர் உயிரிழந்து விட்டார். 2வது திருமணம் செய்து அவரிடம் இருந்து விவகாரத்து பெற்று விட்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

அதன் பின்னர், 3வதாகவும், 4வதாகவும் அடுத்தடுத்து திருமணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மோசடியாக பணம் சம்பாதிக்க திட்டமிட்ட அவர், திருமண மேட்ரிமேனி நிறுவனத்தில் போலியன பெயர் விவரங்களைப் பதிவு செய்து,

மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களிடம் ஆசை வார்த்தைகள் பேசி பணம் வசூலித்துள்ளார். பொள்ளாச்சி இளைஞரிடம் ரூ.7.12 லட்சம் பணம் மட்டுமின்றி, ஈரோட்டைச் சேர்ந்த இளைஞரிடம் ரூ.4 லட்சம் வரை பணத்தை வசூலித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரப்படுகிறது’ என்றனர்.