பாசமாக அழைத்த தம்பி.. நம்பி சென்ற காதல் தம்பதி ஆணவக் கொலை.. 11 பேர் மீது வழக்குப்பதிவு!!

99

ஹரியானா மாநிலம் வாரணாசியில் உள்ள படலா கிராமத்தை சேர்ந்தவர் தேஜ்வீர் (வயது 27). சுல்தான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மீனா (வயது 24). மீனாவின் தந்தைவழி அத்தையை தேஜ்வீரின் தாய்வழி மாமா மணந்தார்.

இந்நிலையில் மீனா, தேஜ்வீர் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இந்த காதலை மீனாவின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த எதிர்ப்பையும் மீறி, கடந்த ஏப்ரல் 22ம் தேதி, காஜியாபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் மீனாவின் தம்பி சச்சின் (வயது 21) மீனா, தேஜ்வீர் இருவரையும் வாரணாசியில் உள்ள லாலா வரீகம் சந்த் ஜெயின் பூங்காவிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பி இருவரும் சென்றனர்.

அப்போது சச்சினுடன் மீனாவின் தாய் மாமன் மகன் ராகுலும் வந்துள்ளார். இருவரும் தம்பதியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த தன்வீரின் தந்தை போலீசில் புகார் அளித்தார். கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணை நடந்து வருவதாக ஜிந்த் மாவட்ட எஸ்பி மக்சூத் அகமது தெரிவித்தார். தேஜ்வீரின் தாய் மாமன் மகேந்தரின் மகன் வீரேந்தர் மற்றும் அவரது தாய்வழி அத்தை குந்திதேவி உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜிந்த் மாவட்டம் தாரியாவலி கிராமத்தைச் சேர்ந்த சச்சின், ராகுல் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.