திருநெல்வேலி மாவட்டத்தில், தான் பாசமாக வளர்த்து வந்த ஆட்டை தந்தை விற்றதால் 10ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா.
இவரது மனைவி சிவனியம்மாள். இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உண்டு. இளைய மகன் உலகநாதன் (15), கங்கைகொண்டான் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்களது வீட்டில் ஆடு வளர்த்து வந்த நிலையில் அந்த ஆட்டின் மீது உலகநாதன் பாசமாக இருந்தான்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக அந்த ஆட்டை தந்தை சுப்பையா விற்பனை செய்தார். இதனால் உலகநாதன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
பள்ளிக்கூடத்துக்கு செல்ல மாட்டேன் என்றும் அடம் பிடித்து வந்துள்ளார். எனவே உலகநாதனை தாயார் சிவனியம்மாள் கண்டித்தார். ஆட்டுக்காக வருத்தப்பட வேண்டாம், பள்ளிக்கூடத்துக்கு சென்று நன்றாக படிக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது உலகநாதன் விஷம் குடித்துள்ளார். இதில் வாந்தி எடுத்து உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் பார்த்து தாயார் சிவனியம்மாளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
உடனே உலகநாதனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உலகநாதன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.