பிரான்சில் மர்ம நபரால் சுடப்பட்ட பிரித்தானிய குடும்பம்; இறந்த உடல்களை அகற்றியபோது கண்ட அதிரவைத்த காட்சி!!

479

பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானிய குடும்பம் சென்ற காரை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

அந்த துப்பாக்கிச் சூட்டில் காரிலிருந்த Saad al-Hilli (50), அவரது மனைவி Iqbal (47) மற்றும் தாயார் Suhaila Al-Allaf (74) ஆகியோரும், அவ்வழியே சைக்கிளில் சென்றுகொண்டிருந்த Sylvian Mollier (45) என்ற பிரான்ஸ் நாட்டவரும் உயிரிழந்தனர்.

அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்துகொண்டிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் விமானப்படை பைலட்டான Brett Martin என்பவர், கார் ஒன்றின் எஞ்சின் இயக்க நிலையிலேயே இருக்க, காருக்கு முன், சற்று முன் தன்னை தாண்டி சைக்கிளில் வந்த Sylvian Mollier இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு, சைக்கிளை விட்டு விட்டு அருகில் சென்று பார்த்துள்ளார்.

காருக்குள் பார்க்கும்போது, சாரதியின் இருக்கையில் Saad இறந்து கிடப்பதையும், காரின் பின் இருக்கையில் அவரது மனைவி Iqbal, தாயார் Suhailaவும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும் கண்டுள்ளார்.


அவர் காரை நோக்கி செல்லும்போது, காருக்கு பின்னாலிருந்து Zainab (7) என்ற குழந்தை அவரைக் கண்டதும் அவரை நோக்கி நடந்து வந்திருக்கிறாள், ஆனால், அவருக்கு அருகில் வருவதற்குள் அவள் மயங்கி தரையில் சாய்ந்துவிட்டாள்.

உடனே Martin குழந்தையை மீட்டு பாதுகாப்பான நிலையில் படுக்கவைத்துவிட்டு, பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் வந்து அந்த இடத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்துவிட்டு காரின் ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு தடயவியல் நிபுணர்கள் வருவதற்காக காத்திருந்திருக்கிறார்கள்.

இது நடக்கும்போது மாலை மணி 4.20. இரவு 11 மணி ஆகும்போது, அதே பகுதியில் Saad al-Hilli குடும்பத்தினருக்கு சற்று தொலைவில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த ஒரு குடும்பம், Saad குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருந்ததை தாங்கள் பார்த்ததாக சொல்ல, உடனே பொலிசார் ஹெலிகொப்டர் உதவியுடன் அப்பகுதியில் தேடியும் யாரையும் காணவில்லை.

நள்ளிரவில், அதாவது மறு நாள் ஆன பிறகு தடயவியல் நிபுணர்கள் இறந்தவர்களின் உடல்களை அகற்றும்போது, Iqbalஇன் உடலை அகற்ற, அவர்கள் கண்ட காட்சி அதிரவைத்திருக்கிறது. தாய் Iqbalஇன் கால்களுக்கிடையில் அவரது இரண்டாவது குழந்தையான Zeena (4) பயந்து நடுங்கிக்கொண்டு ஒளிந்திருந்திருக்கிறாள்.

அவ்வளவு நேரமும் அவள் தன் இறந்த தாயின் கால்களுக்கிடையே இருந்ததை யாருமே கவனிக்கவில்லை! குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, எட்டு நாளைக்குப்பின், தோளில் குண்டு பாய்ந்திருந்த மூத்த குழந்தையான Zainab, துப்பாக்கியால் சுட்டது ஒரு நபர் மட்டுமே என்றும், அவர் தன்னை தலையில் அடித்ததாகவும் தெரிவித்திருக்கிறாள்.

ஒரு முக்கியமான விடயம், இந்த சம்பவம் நடந்தது 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி. நீண்ட விசாரணைக்குப்பின்பும் குற்றவாளி சிக்கவேயில்லை. சம்பவத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகள், குழந்தைகளான Zainabம் Zeenaவும் மட்டுமே.

அவர்கள் சிறு குழந்தைகளாக இருந்ததாலும், தங்கள் கண் முன்னே பெற்றோர் கொல்லப்பட்டதைக் கண்ட அதிர்ச்சியில் இருந்ததாலும், அவர்கள் விசாரிக்கப்படவில்லை.

தற்போது பிரித்தானியாவில் Zainab (15)ம் Zeena (12)வும் பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்கியிருக்கும் நிலையில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரெஞ்சு பொலிசார் பிரித்தானிய பொலிசாரிடம் அனுமதி பெற்று மீண்டும் விசாரணையைத் துவக்க இருக்கிறார்கள்.

பிள்ளைகள் தற்போது ஓரளவுக்கு வளர்ந்துவிட்டதால், அவர்கள் அளிக்கும் தகவல்கள் குற்றவாளியை பிடிக்க உதவலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.