சமீபத்தில்தான் தன் வீட்டின் அருகே கத்தியுடன் நடமாடிய இருவரை துரத்தியடித்த ஒரு வீட்டின் உரிமையாளரின் குதிரை கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்குள், மீண்டும் தாக்குதலை துவக்கிவிட்டார்கள் குதிரை கொலைகாரர்கள். மீண்டும் குதிரை ஒன்று தாக்கப்பட்டுள்ளது… ஒற்றைக் காதறுபட்ட நிலையில் இறந்து கிடந்த அந்த குதிரையின் மண்டையோடு கல்லால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது.
அந்த குதிரை மீது யாரோ ஏறி குதித்தது போல, அதன் உதரவிதானம் (diaphragm) வெடித்திருந்தது.
இது கைதேர்ந்த தொழில்நுட்பமும் விஞ்ஞான அறிவும் கொண்டவர்களின் கைவேலை என்பதில் சந்தேகமில்லை என பொலிசார் தெளிவுபட தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் தொடர்ந்து குதிரைகளும் கழுதைகளும் தாக்கப்படுவது மற்றும் சில நேரங்களில் கொல்லப்படும் நிலையில், அப்படி தாக்குபவர்கள் அவைகளின் காதுகளை அறுத்து எடுத்துக்கொள்கின்றனர்.
ஒருவேளை இத்தனை குதிரைகளை கொன்றிருக்கிறோம் என மார்தட்டிக்கொள்வதற்காக அவற்றை அவர்கள் சேகரிக்கிறார்களா என்பது புரியாத புதிராகவே உள்ளது.
முன்னர் குதிரைகள் மட்டுமே தாக்கப்பட்டு காதறுபட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது போய், இப்போது கழுதைகள், கன்றுக்குக்குட்டிகள் கூட தாக்கப்படுவதுடன், அவற்றின் இனப்பெருக்க உறுப்புகள் சிதைக்கப்படுவது, கொல்லப்படுவது என இந்த அராஜகத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.