பிரித்தானியாவில் பிரபலமான பல பல்பொருள் அங்காடிகளுக்கு காய்கறிகளை விநியோகிக்கும் காய்கறி பண்ணை ஒன்றில் 73 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹியர்ஃபோர்ட்ஷையர் பகுதியில் அமைந்துள்ள குறித்த காய்கறி பண்ணையில் 200 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஹியர்ஃபோர்ட்ஷையர் பகுதியில் அமைந்துள்ள பிரபல காய்கறி பண்ணை ஊழியர்கள் பலருக்கு சமீப நாட்களில் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. இந்த பண்ணையில் இருந்தே, பிரபலமான பல பல்பொருள் அங்காடிகளுக்கும் காய்கறிகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஊழியர்கள் பலர் பண்ணையின் அருகாமையிலேயே கூட்டமாக டிரெய்லர்களில் வசித்தும் வந்துள்ளனர்.
தற்போது இந்த பண்ணையில் 73 பேருக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்ட நிலையில், பண்ணையில் உள்ள எந்த தொழிலாளர்களும் வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் தேவையான உதவியைப் பெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, பண்ணையில் இருந்து பாதிப்பு வெளியே பரவாமல் இருக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஊழியர்கள் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சமூக விலகளை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களை குறைந்தது 20 விநாடிகளுக்கு வழக்கமாக கை கழுவுவதை ஊக்குவித்துள்ளதாகவும் மற்றும் மூடப்பட்ட பகுதிகளில் மாஸ்க் பயன்படுத்துவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட சில பண்ணைகளில் பாதுகாப்பு கருதி பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.