ஆண்டொன்றிற்கு 250,000க்கும் அதிகமான திருமணங்கள் நடைபெறும் பிரித்தானியாவில் கொரோனாவால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் திருமணத்துக்கு காத்திருந்த ஜோடிகள் ரொம்பவே திணறிப்போனார்கள்.
தற்போது பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் திருமணங்கள் இனி நடத்தலாம் என அனுமதியளித்துள்ள நிலையிலும், சில விதிகளைக் கடைப்பிடித்துதான் ஆகவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவைகளில் முக்கியமான சில விதிகள், மணப்பெண்ணின் தந்தை தன் மகளை திருமணம் நடக்கும் ஆலயத்திற்குள் அழைத்துவரும்போது, மகளின் கையைப் பிடித்து அழைத்து வரக்கூடாது.
மோதிரம் மாற்றிக்கொண்டதும் மணமக்கள் கைகளைக் கழுவிக்கொள்ளவேண்டும். திருமணங்களில் 30 பேர் வரை கலந்துகொள்ளலாம், ஆனால் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.
குடும்பங்களுக்குள் வேண்டுமானால் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ளலாம், ஆனால், இரண்டு குடும்பத்தினர், சாட்சிகள், புகைப்படக் கலைஞர் முதலானவர்களுக்குமட்டுமே அனுமதி.
திருமண ஆராதனையின்போது, பாடல் பாடவோ, சத்தம் எழுப்பவோ கூடாது.
இசையும் வாசிக்கக்கூடாது, ஏனென்றால் இசை வாசிக்கும்போது பாதிரியார், இந்த பெண்ணை உனக்கு மனைவியாக ஏற்றுக்கொள்ள சம்மதமா என்பதைக் கூட சத்தமாக கேட்கவேண்டியிருக்கும் என்பதால்தான் இந்த தடை.
மொத்தத்தில் திருமணம் நடத்த அனுமதியளிக்கப்பட்டாலும், அதனால் எக்காரணம் கொண்டும் கொரோனா பரவிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.