பிரித்தானியாவில் பிரைட்டன் பகுதி மருத்துவமனைக்குள் கத்தியால் தாக்குதலுக்கு இலக்கான நபரின் புகைப்படம் மற்றும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரைட்டனில் உள்ள ராயல் சசெக்ஸ் கவுண்டி மருத்துவமனையில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் தாக்குதலுக்கு இலக்கானவர் 56 வயதான ஜோசப் ஜார்ஜ் என்ற தகவல் புகைப்படத்துடன் தற்போது வெளியாகியுள்ளது.
இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான இவர் குறித்த மருத்துவமனையில் உணவு பரிமாறும் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பீனா அதே மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் பிரிவில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இரவுப்பணி முடித்து, குடியிருப்பில் ஓய்வெடுத்து வந்த பீனா, கணவருக்கு ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பில் அறிந்தே தூக்கத்தில் இருந்து எழுந்ததாக கூறியுள்ளார். இது பயங்கரமானது. ஜோசப் மிகவும் அர்ப்பணிப்புள்ள ஊழியர், அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்க கூடாது என சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் வெளியிட்ட தகவலின்படி, ஜார்ஜ், ஆபத்தான நிலையில் இல்லை எனவும், சிகிச்சையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஞாயிறு பகல் சுமார் 8.42 மணியளவில் பிரைட்டனில் உள்ள ராயல் சசெக்ஸ் கவுண்டி மருத்துவமனையில் இருந்து தகவல் வந்ததாகவும்,
மருத்துவமனை ஊழியர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அடுத்து குறித்த மருத்துவமனைக்கு விரைந்த பொலிசார், துரிதமாக செயல்பட்டு, மொத்த மருத்துவமனையையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் விசாரணைகளை அடுத்து, 30 வயதான ஒருவர் அருகிலுள்ள வில்சன் அவென்யூவில் காலை 9.40 மணியளவில் கொலை முயற்சி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்,
தற்போது அவர் மேலதிக விசாரணைகளுக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.