புதிய கார், பைக் விலை குறையுது! மக்களுக்கு திடீரென அடித்த பெரும் அதிர்ஷ்டம்!

1354

புதிய கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் விலை அதிரடியாக குறையவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) உலகையே உலுக்கி எடுத்து கொண்டுள்ளது. பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. மனித உயிர்களை கொத்து கொத்தாக பறிப்பதுடன், பொருளாதாரத்தையும் கொரோனா வைரஸ் நிலைகுலைய செய்துள்ளது.

குறிப்பாக ஆட்டோமொபைல் துறை பலத்த அடியை வாங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை முடங்கியதால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர அரசின் உதவியை அவை எதிர்நோக்கியுள்ளன.

இந்தியாவை பொறுத்தவரை கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினம் முதல் இங்கு வாகன உற்பத்தி நடைபெறாமல் இருந்து வந்தது. அத்துடன் டீலர்ஷிப்களும் இழுத்து மூடப்பட்டன. ஆனால் தற்போது ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகின்றன.


இதன் காரணமாக கடந்த மே 4ம் தேதி முதல் இந்தியாவில் வாகன உற்பத்தி மீண்டும் தொடங்கியது. மேலும் டீலர்ஷிப்களும் திறக்கப்பட்டன. மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. எனினும் வாகன விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை.

இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு அதிரடி அறிவிப்பின் மூலமாக வாகன விற்பனை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது, புதிய வாகனங்களுக்கு நீண்ட கால இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம் என்ற உத்தரவை, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் திரும்ப பெற்று கொள்வதாக தற்போது அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority of India – IRDAI) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக ஆலோசித்த பின்பு, புதிய வாகனங்களுக்கு நீண்ட கால இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம் என்ற உத்தரவை, திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், நீண்ட கால இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம் என்ற உத்தரவு திரும்ப பெறப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வாகனங்களின் விற்பனை மிகவும் கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. பண புழக்கம் பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய வாகனங்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஆனால் நீண்ட கால இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம் என்ற உத்தரவு திரும்ப பெறப்படுவதால், வாகனங்களின் ஆன்-ரோடு விலை குறைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய வாகனங்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படலாம். இதன் மூலம் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப, புதிய வாகனங்களை வாங்கும்போது நீண்ட கால இன்சூரன்ஸ் பாலிசிகளை பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதன்படி புதிய கார்கள் என்றால், 3 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டை பெறுவது கட்டாயம். அதுவே இரு சக்கர வாகனங்கள் என்றால், ஐந்து ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் பாலிசியை பெறுவது கட்டாயம்.

கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலில் இருந்து வந்தது. வாகனங்களின் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, இந்த உத்தரவுதான் தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களுக்கு பயன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

நீண்ட கால இன்சூரன்ஸ் கட்டாயம் என்ற உத்தரவால், வாகனங்களின் ஆன்-ரோடு விலை அதிகளவில் இருந்து வந்தது. புதிய வாகனங்களை மக்கள் வாங்குவதில், இதன் காரணமாக தடை ஏற்பட்டது. தற்போது அந்த தடை விலகியுள்ளது. புதிய வாகனம் வாங்கலாமா? என்ற சிந்தனையில் இருப்பவர்கள், தற்போது உடனடியாக புதிய வாகனத்தை வாங்கி விடுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பஸ், ரயில், ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய பலர் தற்போது அச்சப்படுகின்றனர். அதற்கு பதிலாக சொந்த வாகனத்தில் பயணம் செய்வதையே அவர்கள் பாதுகாப்பாக கருதுகின்றனர். இப்படிப்பட்ட எண்ணம் இருந்தும், சொந்த வாகனம் இல்லாதவர்களும், புதிய வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.