புரோட்டீன் ஷேக்..
ஒல்லியாக இருக்கும் உங்கள் குழந்தைகள் குண்டாக வேண்டுமா, சுறுசுறுப்பாக வேண்டுமா,புத்திசாலியாக வேண்டுமா இந்த டிரிங்கை வாங்கி கொடுத்தால் எல்லாம் ஒரே வாரத்தில் வித்தியாசம் காணலாம் என கண்ணை கவரும் தொலைக்காட்சி விளம்பரங்கள் பெற்றோர்களின் மனதில் பெரும் ஆசையை தூண்டி விட்டுவிடுகின்றன. குழந்தைகளின் வளர்ச்சிக்கு விட்டமின் பவுடர்கள், புரோட்டீன் பவுடர்கள் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பெற்றோர்கள் கர்ம சிரத்தையாக குழந்தை சாப்பிடுகிறதோ இல்லையோ புரோட்டீன் பவுடரை கலக்கி குடிக்க வைத்து விடுகின்றனர். இதனை குடித்து வளரும் பிள்ளைகள் தான் அதிக புத்திசாலியாக இருப்பதாக டீவி விளம்பரங்களில் காட்டப்படுவதால் எந்த வீடும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஆனால் அதிலும் கெமிக்கல் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். இதனால் உயிருக்கே ஆபத்தாக கூட முடியலாம் என்ற அதிர்ச்சி தரும் தகவல் பெற்றோரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேற்கு லண்டனில் உள்ள ஈலிங் மாவட்டத்தில் வசித்துவரும் இந்திய வம்சாவளி சிறுவன் ரோஹன் கோதானியா .
இவன் கடந்த 2020ல் ஆகஸ்ட் 15ல் புரோட்டீன் ஷேக் குடித்ததால் நோய்வாய்ப்பட்டார். பின்னர் வெஸ்ட் மிடில்செக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளில் அவருக்கு மீள முடியாத மூளை பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
அதையடுத்து அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்துவிட்டார். சிறுவன் ரோஹனின் மரணத்திற்கு என்ன காரணம் என பெற்றோர்கள் குழம்பிதவித்த வேளையில் அவரது உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்டன.
இந்நிலையில் ரோஹனின் மரணம் குறித்து மில்டன் கெய்ன்ஸ் கரோனர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின.
அதாவது, புரோட்டீன் ஷேக் குடித்ததால் அந்த சிறுவனுக்கு ஒரு அரிய மரபணு பாதிப்பு ஏற்பட்டதாகவும், அது மீள முடியாத மூளை பாதிப்புக்கு வழிவகுத்தது. இந்த பாதிப்பால் தான் சிறுவன் உயிரிழக்க நேரிட்டது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் தந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன் மகன் மிகவும் மெலிந்து காணப்பட்டான். இதனால் தசைகளை வளர்க்க உதவும் புரோட்டீன் ஷேக்கை தொடர்ந்து வாங்கிக் கொடுத்ததாக கூறியுள்ளார்.
ஆனால் அந்த புரோட்டீன் ஷேக் Ornithine Transcarbamylase குறைபாடு எனப்படும் அரிய மரபணு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இது ரோஹனின் ரத்த ஓட்டத்தில் அமோனியாவின் முறிவைத் தூண்டி ஆபத்தான நிலைக்குத் தள்ளியுள்ளது.
இச்சம்பவத்துக்கு பிறகு, கடைகளில் விற்கப்படும் புரோட்டீன் ஷேக்குகளில் உயிர் காக்கும் சுகாதார எச்சரிக்கை வாசகங்கள் சேர்க்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தின் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ரோஹனின் தந்தை, “நான் தசைகளை வளர்ப்பதற்காகத்தான் புரோட்டீன் ஷேக்கை வாங்கினேன். என் மகன் மிகவும் ஒல்லியாக இருந்ததால் அவரை சாப்பிடச் சொல்லி நச்சரிப்பதைவிட, இதுபோன்ற ஷேக் மூலம் அவரின் தசைகளை வளர்க்கலாம் என முடிவு செய்தோம். இதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை” என மிகுந்த துயரத்துடன் தெரிவித்துள்ளார்.