பெண்ணாக இருந்து ஆணாக மாறிய காவலருடன் காதல்… கணவர் கண்டித்ததால் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு!!

271

தூத்துக்குடியில் மாற்றுப் பாலினத்தவருடனான காதலை கணவரும் குடும்பத்தினரும் கண்டித்ததால், பெண் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி ஸ்பிக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிப்பிரியா. ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தூத்துக்குடியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ள ஹரிப்பிரியாவிற்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வேம்பார் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ஜெனிட் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதனிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஹரிப்பிரியா விடுமுறை எடுத்துக்கொண்டு சென்னைக்கு பணி நிமித்தமாக செல்வதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால், அவர் சென்னைக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அந்தோணி மற்றும் அவரது குடும்பத்தினர், சென்னை அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் ஹரிப்பிரியாவை காணவில்லை என புகார் அளித்து தேடியுள்ளனர். காவல் துறையினர் செல்போன் மூலம் ஆய்வு செய்ததில் ஹரிப்பிரியா,புதுச்சேரியில் தனது நண்பரான நவநீதபிரியா என்பவருடன் இருப்பது தெரியவந்தது.


நவநீத பிரியா பெண்ணாக இருந்து மருத்துவ சிகிச்சை மூலம் ஆணாக மாறியவர் ஆவார். அவர் புதுச்சேரி காவல்துறையில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இருவரும் கமாண்டோ போலீஸ் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட போது பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்து வந்ததாகவும், திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததும் அப்போது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவரும் உறவினர்களும், விழுப்புரத்தில் நவநீத பிரியாவுடன் இருந்த ஹரிப்பிரியாவை தூத்துக்குடிக்கு அழைத்து வந்துள்ளனர்.

ஆனால், வரும் வழியிலேயே லாரிக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள ஹரிப்பிரியா முயன்றதாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று அதிகாலை அந்தோணி, வேறு அறையில் இருந்த போது, வெளியில் இருந்த அறையில் ஹரிப்பிரியா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து அந்தோணி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், ஹரிப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.