பெல்ஜியத்தில் கிடைத்த வேலை வாய்ப்பு… சாலையோர பழ வியாபாரம்: கவனத்தை ஈர்த்த பெண்மணியின் சோக பின்னணி!

992

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் தொடர் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக சரளமான ஆங்கிலத்தில் அதிகாரிகளிடம் எதிர்த்து போராடிய சாலையோர பழ வியாபாரி பெண்மணி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் கொரோனா பரவலை அடுத்து மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

கடந்த வாரம் நடந்த இச்சம்பவத்தில் சாலையோர பழ வியாபாரி ஒருவர், இந்த தொடர் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக முறையிட்டார். தொடக்கத்தில் இந்தி மொழியில் பேசிய அவர், பத்திரிகை, ஊடகங்களிடம் சரளமான ஆங்கிலத்தில் பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அந்த காணொளி காட்சியானது இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் பெயர் ரெய்சா அன்சாரி என்பதும், இந்தூரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி பட்டதாரி என்பதும் தெரியவந்தது.


தற்போது பழ வியாபாரத்தில் கவனம் செலுத்தும் அவருக்கு, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் பணியாற்ற வாய்ப்பு கிட்டியதாகவும், தாம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என கூறும் அவர்,

அந்த வாய்ப்பை ஏற்க எனது பிஎச்.டி வழிகாட்டியின் அனுமதி தேவைப்பட்டது, ஆனால் அவர் ஆவணத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார் எனவும் ரெய்சா அன்சாரி வருத்தமுடன் தெரிவித்துள்ளார். ஆராய்ச்சி தொடர்பில் பெல்ஜியம் செல்லும் வாய்ப்பை இழந்தவுடன், எல்லா நம்பிக்கையையும் இழந்து கொல்கத்தாவிலிருந்து திரும்பினேன் என்றார் ரெய்சா.

ரெய்சாவின் குடும்பத்தில் அவரது பெற்றோர், மூன்று சகோதரர்கள் மற்றும் அவர்களது எட்டு குழந்தைகள் உட்பட 25 உறுப்பினர்கள் உள்ளனர். தமது சகோதரர்களின் பிள்ளைகளை கவனிப்பதே தற்போது முழு நேர பணி என கூறும் அவர்,

ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதை விட பழங்களை விற்பது ஒரு சிறந்த வழி என்று நான் நினைத்தேன் என்கிறார் ரெய்சா அன்சாரி. மட்டுமல்ல, இந்தியாவில் கொரோனா பரவலை கொண்டு வந்ததே இஸ்லாமியர்கள் என ஆட்சியில் இருப்பவர்கள் குற்றஞ்சாட்டும் இந்த சூழலில், இஸ்லாமியரான என்னைப் போன்றவர்களுக்கு யார் வேலை தருவார்கள் என்றார் நிகழ்கால இந்தியாவை சுட்டிக்காட்டி.