பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் தாய், தந்தை, சகோதரியை இழந்த சிறுவன் பரிதவித்தது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உலுக்கியது.
தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவீந்தர். இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கோயில் திருவிழாவிற்காக காரில் பயணித்தார். காரில் ரவீந்தர், அவரது மனைவி ரேணுகா, மகள் ரிஷிதா (8) மற்றும் மகன் ரிஷிகிருஷ்ணா (6) ஆகியோர் ஒன்று சேர்ந்து பயணித்தனர்.
இந்நிலையில் இவர்களது கார் பிபி குடேம் அருகே சூர்யாபேட்டை பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது, எதிரே வந்துக் கொண்டிருந்த அரசு பேருந்து இவர்களது கார் மீது நேருக்கு நேராக மோதி கோர விபத்திற்குள்ளானது. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை மீட்டு சூர்யாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முயற்சித்தனர்.
ஆனால், ரவீந்தர், ரேணுகா மற்றும் ரிஷிதா ஆகிய மூன்று பேருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.
பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு,
மூன்று பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.