பைக்கிற்கு அண்ணன் பெட்ரோல் ஊற்றும்போது தங்கைக்கு நேர்ந்த துயரம்!!

349

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம், எடியூரு என்ற பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மணா. இவருக்கு, 10ஆம் வகுப்பு படித்து வந்த ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 8 -ம் திகதி இரவு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பைக்கிற்கு கேன் மூலம் அண்ணன் பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால், பெட்ரோல் கீழே சிந்தாமல் இருக்க தங்கை சௌந்தர்யா மெழுகுவர்த்தி மூலம் வெளிச்சம் காண்பித்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் மற்றொரு கையில் வேறொரு பெட்ரோல் கேன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென மின் இணைப்பு வந்துள்ளதால் கையில் இருந்த பெட்ரோல் கேனையும், மெழுகுவர்த்தியையும் பதற்றத்தில் சிறுமி கீழே போட்டுள்ளார். அப்போது, பெட்ரோல் ஓடிய இடமெல்லாம் தீ மளமளவென பரவியது. இதில் சிறுமியின் மீதும் தீ வேகமாக பற்றியது.


இதனிடையே, வீட்டுக்கு பக்கத்திலேயே மளிகை கடை ஒன்றை லஷ்மணா நடத்தி வருகிறார். அவர் கடையும் இந்த தீ விபத்தில் சேதமடைந்துள்ளது. இதில், காயமடைந்த சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில், லஷ்மணா தனது மளிகைக்கடையில் சட்டவிரோதமாக கேன் மூலம் பெட்ரோல் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.