பைக்கில் இருந்து தடுமாறி விழுந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

124

சென்னை ஐசிஎப் காலனி அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் குப்பன். இவரது மகள் 24 வயது ஹேமமாலினி .இவர் எம்.காம் முடித்து விட்டு ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு அவரது அண்ணன் 28 வயது வெங்கடேசன் உடன் அம்பத்தூரில் உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அதன்பிறகு அண்ணாநகரில் வேலை செய்யும் தனது தாயைப் பார்க்க சென்று கொண்டிருந்தார்.அப்போது திருமங்கலம் 18-வது பிரதான சாலை மற்றும் 100 அடி சாலை சந்திப்பு அருகே வந்தபோது மழையால் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருந்தது.

அப்போது மழைநீர் தேங்கி இருந்த சாலை பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கியதால் அண்ணன் – தங்கை இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற வெங்கடேசன் இடதுபக்கம் விழுந்ததால் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பின்னால் அமர்ந்து வந்த ஹேமமாலினி வலது பக்கம் விழுந்ததால் அந்த வழியாக வந்த லாரி, சாலையில் விழுந்து கிடந்த ஹேமமாலினியின் வயிற்றுப் பகுதியில் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய அவரை சிறிது தூரம் இழுத்துச்சென்றது.

இதில் ஹேமமாலினி முகத்தின் ஒரு பகுதி மற்றும் கை, கால் முழுவதும் சாலையில் உரசியபடி சென்றதால் அண்ணன் கண் எதிரேயே உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார். தங்கையின் உடலை பார்த்து வெங்கடேசன் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.


இரவு நேரம் என்பதால் லாரி நிற்காமல் சென்றுவிட்டது.
இது குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தப்பிச்சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.