கேரள மாநிலம் கோட்டயம் அருகே மகளின் காதல் விவகாரத்தால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற கணவர்-மகள் என 3 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சத்தியபாலன் (53). இவரது மனைவி ஸ்ரீஜா(48). இவர்களது மகள் அஞ்சலி (28), மகன் அகிலேஷ் (25). சத்தியபாலன் தனது ஊரில் டீக்கடை நடத்தி வந்தார்.
மேலும் மைக்ரோபோன் பெட்டிகளை வாடகைக்கு எடுக்கும் நிறுவனமும் நடத்தி வந்தார். அவரது மகள் அஞ்சலி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
விடுமுறை கிடைக்கும் போது அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். அதே போல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அஞ்சலி ஊருக்கு வந்திருக்கிறார். அவர் தனது தந்தை நடத்தி வந்த நிறுவனத்தின் அருகில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். ஆனால் அதற்கு அஞ்சலியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் அஞ்சலியை காதலிக்கும் வாலிபர், தனது நண்பர்கள் சிலருடன் அஞ்சலியின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். இதனையறிந்த அஞ்சலியின் பெற்றோர் ஆத்திரமடைந்து, அஞ்சலியைக் கண்டித்தனர்.
இதனால் அவர்களுக்கிடையே நேற்று மதியம் வீட்டில் வைத்து சண்டை நடந்துள்ளது. அப்போது அஞ்சலியின் தாய் ஸ்ரீஜா, கணவரின் நிறுவனத்தில் பயன்படுத்துவதற்கு வீட்டில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இதனால் அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சத்திய பாலன் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் ஸ்ரீஜாவை காப்பாற்ற முயன்றனர்.
அப்போது அவர்களின் மீதும் தீப்பற்றிக் கொண்டது. இதனால் 3 பேரும் உடல் கருகினர். ஸ்ரீஜா தனது உடலில் தீ வைப்பதற்கு முன்னதாக வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தன.
மேலும் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த அஞ்சலியின் சகோதரரான அகிலேசும் பலத்த தீக்காயமடைந்தார்.
சத்தியபாலன் வீடு தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் துணிச்சலாக வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். தீ எரிந்து கொண்டிருந்த போதே வீட்டுக்குள் சென்று அங்கு உடல் கருகி கிடந்த சத்தியபாலன் மற்றும் அவரது மகள் அஞ்சலியை மீட்டனர்.
குளியலறையில் தீக்காயமடைந்து கிடந்த அகிலேசையும் மீட்டார்கள். அவர்கள் 3 பேரையும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காஞ்சிரப் பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ அணைக்கப்பட்ட பிறகு வீட்டுக்குள் சென்று தீயில் கருகி சடலமாக கிடந்த ஸ்ரீஜாவின் உடல் மீட்கப்பட்டது.
இந்நிலையில் கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சத்திய பாலன் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் கணவன்-மனைவி, மகள் என 3 பேரும் பலியாகி விட்டனர்.
ஸ்ரீஜாவின் உடல் காஞ்சிரப்பள்ளி தாலுகா மருத்துவமனைக்கும், சத்தியபாலன் மற்றும் அஞ்சலியின் உடல்கள் கோட்டயம் அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக எரிமேலி சப்-இன்ஸ் பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகளின் காதல் விவகாரம் தொடர்பாக பெண் தீக்குளித்த சம்பவத்தில், அவர் மட்டுமின்றி கணவர்-மகள் என 3 பேர் தீயில் கருகி பலியான சம்பவம் கோட்டயம் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.