திருமங்கலத்தில்..
திருமங்கலம் அருகே முறை தவறிய காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மனம் வெறுத்த காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது.
அழுகிய நிலையில் மூன்று நாட்களுக்கு பிறகு உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி 10ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
சிறுமிக்கு அதே பகுதியில் உள்ள உறவினரான தங்கப்பாண்டி(25) என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது காதலாக மாறியுள்ளது. இவர்களின் காதல் பெற்றோருக்கு தெரியவர பெற்றோர் தங்கப்பாண்டியிடம், “அந்த சிறுமி உனக்கு மகள் முறை வேண்டும். அவளுக்கு நீ சித்தப்பா வேண்டும். எனவே காதலை கைவிட வேண்டும்” என கூறியுள்ளனர்.
இதேபோல் சிறுமிக்கு பெற்றோர்கள் அறிவுரை கூறியுள்ளனர். ஆனாலும் பெற்றோர்களின் அறிவுரையை ஏற்காத சிறுமி கடந்த 20 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
பெற்றோர்களும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் உறவினர்கள் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசாரும் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை செங்கப்படை – கெஞ்சம்பட்டிக்கு இடையே உள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரத்தில் 2 பேர் தூக்கிட்டு நிலையில் இறந்து கிடப்பதாக காட்டு வேலைக்கு சென்றவர்கள் போலீசாருக்கு தெரிவித்தனர்.
அதன்படி உடனடியாக உறவினர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்றபோது அது தங்கப்பாண்டி மற்றும் சிறுமி இருவரும் மரத்தில் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தனர்.
மேலும் அவர்கள் இறந்து 3 நாட்களுக்கு மேலாக ஆனதால் இருவரின் உடல்கள் அழுகிய நிலையில் இருந்தது. இருவரின் உடலை கைப்பற்றிய திருமங்கலம் தாலுகா போலீசார் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில்,
சிறுமி இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு வாய்ப்பில்லை எனவும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இறந்த இருவரின் உடல்களையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.