குடித்துவிட்டு தினமும் தகராறு செய்துவந்த கணவனால் மனம் உடைந்த இளம் பெண் தனது 3 குழந்தைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்வம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மேல சிறுபோது கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கும் பரமக்குடி அருகே ஆவரேந்தலை சேர்த்த 29 வயதுடைய பாண்டிச் செல்விக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆவரெந்தல் கிராமத்தில் இந்த தம்பதி ஒரு மகன், இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்ததுள்ளனர்.
இந்நிலையில் முருகன் தினந்தோறும் குடித்து விட்டு மது போதையில் பாண்டிச்செல்வியிடம் பிரச்சினை செய்வது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது.
அதன்படி நேற்று இரவு இவர்களுக்குள் ஏற்பட்ட தகராரில் மன வேதனையில் இருந்த பாண்டிச்செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த தாலுகா காவல் துறையினர் இறந்து பாண்டி செல்வியின் உடலை கைப்பற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த பாண்டிச் செல்வியின் ஒரு வயதே ஆன பெண் குழந்தை தாயைக் காணாமல் தாய்ப்பாலுக்கு ஏங்கி அழுதது காண்பவர்களை கலங்க செய்தது. இது குறித்து சந்தேக மரணம் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தாலுகா காவல் துறையினர் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப பிரச்சினையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஆவரெந்தல் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.