இந்திய மாநிலம் பீகாரில் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நசருல்லா ஹைதர் (55) என்ற நபர், உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவரது மனைவி அஸ்மா கான் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், நசருல்லா வேலை தேடி வந்துள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இருவரும் சண்டையிட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றியபோது, நசருல்லா சுத்தியல் ஒன்றை எடுத்து மனைவியை தலையில் தாக்கியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அஸ்மா கான், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அஸ்மா கான் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் நசருல்லாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில்,மனைவியின் நடத்தையில் நசருல்லாவுக்கு சந்தேகம் இருந்ததால் இந்த கொலை அரங்கேறியது தெரிய வந்தது.