சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், குழந்தை பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் மருத்துவரின் அலட்சியத்தால் தான் இளம்பெண் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லாவரம் திருநீர்மலை வைத்தியகார தெருவில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவரது மனைவி சரண்யா (34). இந்த தம்பதியருக்கு கவின் (9) என்ற மகன் உள்ள நிலையில் 2வது முறையாக கர்ப்பமான சரண்யா, சேலையூரை அடுத்த ராஜகீழ்பாக்கத்தில் உள்ள ‘நியூ லைப்’ எனும் தனியார் மருத்துவமனையில் கருவுற்ற நாள் முதல் மருத்துவர் சுதா என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சரண்யா மருத்துவர் சுதாவின் ஆலோசனையின் பேரில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்தில் சரண்யாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தையை தந்தை மோகன்ராஜிடம் மருத்துவர்கள் காண்பித்துள்ளனர்.
அப்போது தனது மனைவியை பார்க்க வேண்டும் என மோகன்ராஜ் கேட்டதற்கு மருத்துவர்கள் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென சரண்யா ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறிய மருத்துவர்கள் வேளச்சேரியில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால் அதன் பின்னரும் மோகன்ராஜிடம் எந்த பதிலும் தெரிவிக்காமல், தனது மனைவியையும் பார்க்க அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த சரண்யாவின் உறவினர்கள், மருத்துவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, சரண்யா உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் நேற்றிரவு முழுவதும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தனது மனைவி சரண்யாவின் மரணத்திற்கு மருத்துவர் சுதாவின் தவறான சிகிச்சையே காரணம் என்றும்,
உரிய விசாரணை நடத்தி மருத்துவர் சுதா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சரண்யாவின் கணவர் மோகன்ராஜ் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லை என்றும் முறையான கட்டட அனுமதி பெறவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இந்த மருத்துவமனையில் தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால் இது தொடர்பாக சுகாதாரத் துறையும்,
மாநகராட்சியும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சேலையூர் போலீசார் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.