கோவை மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம்-துர்கா (26) தம்பதி. துர்காவின் இரண்டாவது பிரசவத்திற்காக ஏப்ரல் 20ம் தேதி அவர் புளியம்பட்டியில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்று இரவு துர்காவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் துர்காவின் கணவர் குடும்ப கட்டுப்பாடு செய்ய மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
இதையடுத்து, புளியம்பட்டி அரசு மருத்துவமனையில் துர்கா குடும்பக் கட்டுப்பாடு செய்த போது, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, மேல் சிகிச்சைக்காக உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி துர்கா திடீரென இறந்தார். துர்காவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துர்காவின் உறவினர்கள் கூறுகையில், எந்தவித உடல் பரிசோதனையும் இன்றி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை காரணமாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து, செவிலியர்களிடம் டாக்டர்கள் கேட்டபோது, எந்த வித பதிலும் கூறவில்லை என்றும், புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.