முன்னாள் காதலனின் செல்போனை பறிக்க பளே திட்டம் தீட்டிய இளம்பெண்!!

19

தான் காதலித்து வந்தவனின் செல்போனில் தனது அந்தரங்க வீடியோக்களும், புகைப்படங்களும் இருக்கும் நிலையில், காதல் உறவில் இருந்து பிரிய நினைத்த பெண், அதற்கு முன்பாக காதலனின் செல்போனில் இருக்கும் தனது அந்தரங்க வீடியோக்களை அழிப்பதற்காக பலே திட்டம் தீட்டி நாடகமாடியது அம்பலமானது.

கடந்த செப்டம்பர் 20ம் தேதியன்று பெங்களூரு போகனஹள்ளியில் நடந்த விபத்து மற்றும் திருடு போனதாக கூறப்பட்ட சம்பவத்தில் 29 வயது இளம்பெண்ணின் பங்கை பெங்களூரு போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.

கொள்ளையடித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஸ்ருதி என்ற பெண்ணைக் கைது செய்தனர். தனது அந்தரங்க புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்த முன்னாள் காதலனின் செல்போனைப் பறிக்க சில ஆண்களின் துணையுடன் ஸ்ருதி குற்றத்தை திட்டமிட்டு செயல்படுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

பெங்களூரு கொடாத்தி பகுதியில் வசிக்கும் ஸ்ருதியின் கூட்டாளிகளான மனோஜ் குமார், சுரேஷ் குமார், ஹொன்னப்பா மற்றும் வெங்கடேஷ் ஆகியோரையும் பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவில் விபத்து ஏற்பட்ட நிலையில், தன்னை ஒரு மர்ம கும்பல் தாக்கி விட்டு, தன்னிடம் இருந்து செல்போனையும் பறித்துச் சென்றதாக வம்சி கிருஷ்ணா என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார், வம்சி கிருஷ்ணாவின் முன்னாள் காதலி ஸ்ருதி, பெயிண்டரான மனோஜ் உள்ளிட்டோரைக் கைது செய்தனர். மனோஜிடம் இந்த திருட்டைச் செய்ய ஸ்ருதி ரூ.1.1 லட்சம் பணம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.


போலீசாரின் விசாரணையில், ஸ்ருதி தனது முன்னாள் காதலரான வம்சி கிருஷ்ணா ரெட்டியை, செப்டம்பர் 20ம் தேதி இரவு, குறிப்பிட்ட இடத்திற்கு ஸ்கூட்டரில் தன்னுடன் அழைத்துச் செல்லும்படி வற்புறுத்தி உள்ளார்.

அங்கு சென்றதும் மனோஜிடம் அவர்களின் செல்போன்களைக் கொள்ளையடிக்கும்படி சைகை செய்திருப்பதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் தாக்கி, மிரட்டிய பின்னர் அவர்களின் செல்போன்களைப் பறித்து, அன்றிரவு ஸ்ருதியிடம் மனோஜ் கும்பல் ஒப்படைத்தனர்.

இது குறித்த வம்சி கிருஷ்ணாவின் புகாரில், ஒரு வணிகக் கடை அருகே ஏற்பட்ட சிறிய போக்குவரத்து தகராறைத் தொடர்ந்து ஒரு குழுவினர் அவர்களைத் தாக்கி செல்போன்களைப் பறித்துச் சென்றதாகக் கூறப்பட்டது.

ஸ்விஃப்ட் டிசையர் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்ததாகவும், அவர்களின் பைக்கைப் பின்பக்கமாக நிறுத்தியதாகவும், இரண்டு ஆண்கள் விபத்து ஏற்படுத்தியதாக கூறி, தங்கள் செல்போன்களை அடித்து பிடுங்குவதற்காக மறைவில் இருந்து வெளியேறியதாகவும் வம்சி கூறியிருந்தார்.

போலீசாரின் விசாரணையில் புகாரளிக்கப்பட்ட இடத்தில் விபத்து ஏதும் ஏற்படவில்லை என்பதை கண்டுபிடித்தனர். ஆனால் நான்கு ஆண்கள் ஸ்ருதியையும், வம்சியையும் தடுத்து, தங்கள் காரை மோதிவிட்டதாகக் கூறி செல்போன்களைப் பிடுங்கிச் சென்றதை உறுதிபடுத்தினர்.

வம்சியுடனான தனது உறவு தடம் புரண்ட பிறகு பாதுகாப்பற்றதாக ஸ்ருதி உணர்ந்ததாகவும்,

எதிர்காலத்தில் வம்சி தங்களின் அந்தரங்க புகைப்படங்களையும், வீடியோவையும் தவறாகப் பயன்படுத்துவாரோ என்ற அச்சத்தில் முழு நாடகத்தையும் வகுத்ததாகவும் ஸ்ருதி போலீசாரிடம் கூறினார்.

அந்தரங்க வீடியோக்களை நீக்கிவிட்டதாக ஸ்ருதியிடம் வம்சி உறுதியளித்த போதிலும், அவர் தனது செல்போனை அவளிடம் கொடுக்க மறுத்துவிட்டது ஸ்ருதிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஸ்ருதி தனது வீட்டில் வேலை செய்த மனோஜை தொடர்பு கொண்டு, இந்த செல்போன் கொள்ளையை நடத்த லஞ்சம் கொடுத்தார். தனக்கு கூடுதல் தொகை தேவை என்று மனோஜ் அவளிடம் தெரிவித்தபோது, ​​ஒரு கும்பலைக் கூட்டுவதற்கு ரூ. 1.1 லட்சம் கொடுத்திருக்கிறார்” என்று போலீசார் கூறினார்.

இருப்பினும், வம்சியின் செல்போனை பார்த்து ஆராய ஸ்ருதி எடுத்திருந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஏனெனில் அது லாக் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து செல்போன் கடைகளில் தந்தால் வீடியோக்கள் வெளியாகி விட வாய்ப்பிருப்பதாக பயந்த ஸ்ருதி, விரக்தியடைந்த நிலையில், மறுநாள் சிங்கசந்திரா ஏரியில் செல்போனை வீசியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.