பிரித்தானியா தலைநகர் லண்டனில் கருப்பினத்தவர் ஒருவர் முழங்காலில் நின்ற நிலையில், அவரை வட்டமிட்டு தாக்கிய 8 பொலிசார் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு லண்டனின் குரோய்டோனில் ஒரு தெருவில் காவல்துறையினர் ஒருவரைத் தடுத்து நிறுத்தியதை அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்த நபரிடம் ஆயுதம் இருந்ததாக கருதிய பொலிசார் அவரை மடக்க முயன்றபோது அவர் தப்ப முயன்றார் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே சுமார் 8 பொலிசார் அவரை முழங்காலில் நிற்க வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் தரையில் அவரை அழுத்தி, இரு பொலிசார் முழங்காலிட்டு அவர் அருகில் இருந்தனர்.
தொடர்ந்து மூன்று பொலிஸ் அதிகாரிகள் அந்த பகுதியில் இருந்து வெளியேறவே எஞ்சிய 5 காவலர்கள் அந்த கருப்பின நபரை வட்டமிட்டு நின்றுள்ளனர். குறித்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொலிஸ் தரப்பில், முதலில் அந்த நபரிடம் ஆயுதம் இருப்பதாக கருதியதாகவும், பின்னர் அது ஆயுதமல்ல என்பது உறுதியானது எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த நபர் கைது செய்யப்படவில்லை எனவும், காயங்கள் ஏற்பட்டதாக புகார் அளிக்கப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பொதுமக்களில் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.