உள்ளங்கைக்குள் உலகம் என்றான பின்னர், கூகுள் டாக்டரை நம்பி உயிரை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போலவே, மருத்துவ ஆலோசனைகளுக்கு யூ-ட்யூப்பில் வரும் நிறைய குப்பை வீடியோக்களை உண்மையென்று பலரும் நம்பி தங்கள் உயிரோடு விளையாடுகின்றனர்.
இந்நிலையில், தனக்குத்தானே யூ ட்யூப் வீடியோ பார்த்து அதிர வைத்திருக்கிறார் இளைஞர் ஒருவர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டம் சுன்ராக் கிராமத்தில் வசித்து வருபவர்ராஜா பாபு(32). இவருக்கு சமீப காலமாக மிகக் கடுமையான வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக சில மருத்துவர்களை அணுகினார்.
ஆனாலும் அவருக்கு வலி குணமாகவில்லை. வலி குறையாததால் விபரீத முடிவு ஒன்றினை எடுத்துள்ளார். வயிறு வலி குறித்து யூட்யூப் வீடியோக்களை பார்த்த அவர் தன்னுடைய வயிற்று வலி பிரச்சனைக்கு தானே தீர்வு காணும் முடிவை எடுத்துள்ளார்.
தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்யும் முடிவை எடுத்த ராஜா பாபு, மருந்தகத்திற்கு சென்று அதற்கான உபகரணங்களை வாங்கி வந்துள்ளார்.
யூட்யூப்களில் தான் பார்த்தபடி அறுவை சிகிச்சை செய்ய முயற்சி செய்துள்ளார். மயக்க மருந்து எடுத்துக் கொண்டு அறுவைச் சிகிச்சை செய்து முடித்து 11 தையல்கள் போட்டுள்ளார்.
ஆனால், மயக்க மருந்தின் வீரியம் குறைந்து இயல்பு நிலை திரும்பிய பிறகு மிகக் கடுமையான வலியை உணர்ந்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு முன்பு இருந்ததைவிட நிலைமை மேலும் மோசமாகி விட்டது. அதனால் வலி தாங்க முடியாமல் கத்திவிட்டார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
முன்னதாக, 18 வருடங்களுக்கு முன்பு ராஜா பாபுவிற்கு அப்படீக்ஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாகவும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
நிலைமை மோசமாக இருந்ததன் காரணமாக ஆக்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.யூட்யூப் பார்த்து தனக்கு தானே ஒருவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள விஷயம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.