ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பேஸ்கட்பால் வீராங்கனை பரிதாபமாக மரணம்!!

130

நாடு முழுவதும் பல உணவகங்களில் விஷத்தையே உணவாக பரிமாறுகின்றனர். குறிப்பாக அசைவ வகையான உணவுகளில் கெட்டுப் போன இறைச்சியைப் பயன்படுத்தி சமைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

கூடவே பிரியாணியில் புழுக்கள் நெளிவது, எலியின் தலை, கரப்பான்பூச்சி என வாடிக்கையாளர்களின் உடல் நலத்தைப் பதம் பார்க்கின்றன.

இதில் சிக்கன் ஷவர்மா துவங்கி சால்னா வரை பாகுபாடு கிடையாது. இந்நிலையில், ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வீராங்கனை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதைபதைக்க வைக்கிறது.

கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பயின்று வந்தவர் எலினா லாரெட். 15 வயது மாணவியான இவர் கூடைப்பந்து விளையாடுவதில் வல்லவர். பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

இதில் பங்கேற்க சென்னை வந்த அவர், அங்கிருந்து ரயில் மூலம் குவாலியர் சென்றார். அங்கு நடந்த போட்டியில் பங்கேற்றுவிட்டு, கடந்த 15ம் தேதி ரயில் மூலம் சென்னை திரும்பினார்.


ரயிலில் வந்த மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற எலினா, தனக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு குறித்து உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து எலினாவை ஆம்புலன்ஸ் மூலம் பெரியமேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே எலினா உயிரிழந்தார். அதன்பின், போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது மரணம் தொடர்பான விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயிலில் சென்னை வந்தபோது ஆன்லைனில் பர்கர், சிக்கன் ரைஸ், பீட்சா ஆர்டர் செய்து உடன் வந்தவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டதாக தெரிகிறது. ​​

ஸ்விக்கி மற்றும் சொமோட்டோ மூலம் பயணம் செய்யும் போது ஆர்டர் செய்தால் அருகில் உள்ள ரயில் நிலைய நடைமேடைக்கு நமது ரயில் வரும் போது பெட்டியில் வந்து உணவு டெலிவரி செய்யப்படும்.

அப்படித்தான் ஆர்டர் செய்தார்கள். இதை சாப்பிட்ட எலினாவுக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் எலினாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கோவைக்கு செல்லாமல் சென்னையில் உள்ள உறவினர்களிடம் கூறி விட்டு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எனவே அவர் ஆர்டர் செய்த உணவுதான் அவரது உயிரிழப்புக்கு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். எனினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே சரியான காரணம் தெரியவரும் என அவர்கள் தெரிவித்தனர்.