ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த தாயை தட்டி எழுப்ப முயன்ற குழந்தைக்கு ஆதரவுக் கரம் கொடுக்கும் ஷாருக்கான்!!

1151

ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி கிடைக்காத நிலையில், பலர் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இவ்வாறு செல்லும்போது உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து அரங்கேறுகின்றது.

இந்தநிலையில் கடந்த 27-ம் திகதி குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் பீகார் மாநிலம் முசாபர்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் இறந்துவிட்டார். சரியாக சாப்பிடாததால் ரெயிலில் ஏறும்போதே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பசி, உடல் வெப்பம் அதிகரிப்பு மற்றும் நீர்ச்சத்து குறைந்த நிலையில், ரெயில் முசாபர்பூரை நெருங்கும்போது அவர் இறந்துள்ளார்.

அவரது உடல் ரெயில்நிலைய பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தாய் இறந்ததை அறியாத அவரது பச்சிளம் குழந்தை, தாயை எழுப்ப முயற்சித்தது. தாய் மீது போர்த்தப்பட்டிருந்த துணியை இழுத்தது. அந்த குழந்தையை மூத்த குழந்தை தடுத்து வெளியே இழுத்தது. இதைப் பார்த்த அனைவரும் கண்ணீர் விட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பசியினாலும், தாகத்தினாலும் அந்தப் பெண் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். தாயின் மரணத்தை கூட அறிய முடியாத குழந்தையின் நிலையை நினைத்து மக்கள் வருத்தமடைந்தனர்.இந்தக் காட்சிகளை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் குழந்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார். அவர் நடத்தும் மீர் அறக்கட்டளை மூலம் இந்த உதவிகள் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மீர் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில்:-


பீகார் ரெயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை எங்கள் அறக்கட்டளையை வந்து சேர உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி. அந்தக் குழந்தை, இறந்து கிடந்த தனது தாயை எழுப்ப முயன்ற காட்சிகள் மனதை கலங்க வைத்தது. தற்போது தனது தாத்தாவின் அரவணைப்பில் இருக்கும் அந்த குழந்தைக்கு உதவ நாங்கள் முன்வந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், தங்களை குழந்தையுடன் தொடர்பில் வைக்க உதவியவர்களுக்கு நடிகர் ஷாருக்கானும் நன்றி தெரிவித்துள்ளார். தாயை இழந்த இந்த துரதிருஷ்டமான சூழலில், குழந்தைக்கு மன வலிமை கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். நமது அன்பைபும், ஆதரவையும் அந்தக் குழந்தைக்கு வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார். தாயை பிரிந்து வாடும் குழந்தைக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஷாருக்கானை பலரும் பாராட்டி வருகின்றனர்.